அண்மையில் வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனின் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கே பொலிஸாரினால் அலட்சியமான பதில் எனில் சாதாரண பொது மக்களின் நிலை என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனை பார்வையிடச் சென்று அவரின் விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்ததுடன்,அவர் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் சம்பந்தமாக வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கும் சென்று வினவியிருந்தார்.
தாக்குதலுக்குள்ளான தினம்,இடம்பெற்ற சம்பவம் குறித்து இளைஞனுடனும் மற்றும் அவர் குடும்பத்தினருடனும் கலந்துரையாடியதோடு,அவரது தாக்குதல் தொடர்பில் உரிய நீதி விசாரணை சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும்,இவ்விடயம் தொடர்பில் வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியை சந்தித்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்;
கடந்த 5 ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் ரூபன் என்ற இளைஞர் பொலிஸாரினால் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் அவர் தொடர்பிலான விசாரணைகள் எவ்விதம் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியிடம் கோரிய போது இது தொடர்பில் தன்னால் எவ்விடயங்களும் சொல்ல முடியாது என அவர் தெரிவிதுள்ளார்.இது தொடர்பில் எந்த தகவல்களும் சொல்ல முடியாது எனவும் மறுத்துவிட்டார்.
ஒரு பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரி சொல்லும் பதிலா இது. கடந்த 5 ஆம் திகதி நடந்த சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எந்தத் தகவலும் சொல்ல முடியாது என்றால் மக்கள் எவ்வாறு காவல்துறையை நம்புவது.
வவுணதீவு பொலிஸ் அதிகாரி சொல்கின்றார் தான் இதற்குப் பதில் சொல்ல முடியாது என்று.நாட்டின் பாராளுமன்றத்தின் பிரதிநிதி ஒருவர் கேட்கும் போதே எவ்வித பதிலும் சொல்ல முடியாது என்கிறார்கள் என்றால்,சாதாரண மக்களுக்கு எவ்விதமான பதிலை இவர்கள் சொல்லப் போகின்றார்கள். தெலைபேசியில் கேட்கையில் நேரடியாக வாருங்கள் என்று சொல்லிவிட்டு நேரடியாக வரும் போது தகவல் சொல்ல முடியாது என்று சொல்லுகின்றார்.
தாக்கப்பட்ட நபர் ஒரு பொலிஸ் அதிகாரியின் பெயரைக் குறிப்பிடுகையில்,அவரின் பெயரில் எத்தனையோ நபர்கள் இருக்கலாம் என்றும் அது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இடம்பெறவில்லை என்றும் அலட்சியமான பதில்களையே சொல்கின்றார்கள்.இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயங்களாக இல்லை.
பொலிஸார் மக்களை இவ்வாறாக கையாண்டால் இந்த நாட்டில் இதற்கு மேலும் தமிழ் மக்கள் வாழ முடியாத நிலைமையே ஏற்படும்.
இந்த மாவட்ட மக்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும்.நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கையாள்வதற்குரிய முயற்சிகளை எடுத்து வருகின்றேன்.ஆனால் மாவட்டத்தில் அரசுடன் இருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மண் மாபியாவுக்கு வேலை செய்யாமல் மக்களுக்காக வேலை செய்ய முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.