
விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தால், வர்த்தக அமைச்சரின் தலையீட்டினால் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2 வருடங்களுக்குள் நெல்லின் அதிகபட்ச விலை 25 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.
விவசாய அமைச்சில் இன்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நெல்லின் கொள்வனவு விலை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் 30 ரூபாவாக இருந்த நிலையில், தற்போது 55 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.இது வரலாற்றில் வழங்கப்பட்டுள்ள சிறந்த விலை என அவர் குறிப்பிட்டார்.
விவசாய அமைச்சராக, தாம் அரிசியை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்ட போதிலும் விவசாயிகள் தொடர்ந்து நெல்லை விற்பனை செய்யாது போராட்டத்தில் ஈடுபட்டால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும்.
எனவே அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் கூறினார்.
விவசாயிகள் சூழ்நிலையை புரிந்து கொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கேட்டுக் கொண்டுள்ளார்.