July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நான் மதுபோதையில் சென்று சிறைக்கைதிகளை அச்சுறுத்தவில்லை”; லொஹான் ரத்வத்த

தாம் ஒருபோதும் மது அருந்திவிட்டு சிறைச்சாலைக்குள் சென்று சிறைக் கைதிகளை அச்சுறுத்தவில்லை என  சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்த லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை மிரட்டவில்லை என்றும், வழக்கமான கண்காணிப்பு விஜயமொன்றுக்காகவே சிறைக்கு  சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தான் வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கு மேடைக்கு சென்றதை லொஹான் ரத்வத்தே ஏற்றுக் கொண்டார்,

ஆனால் அதுவும் வழக்கமான சோதனைக்காகவே அங்கு சென்றதாக தெரிவித்த அவர், குடிபோதையில் இருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

குறித்த இரண்டு சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த முதல் முறையாக இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஒரு அமைச்சராக, நான் எந்த நேரத்திலும் எந்த சிறைக்கும் செல்ல முடியும். எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. எனக்கு கீழ் 29 சிறைச்சாலைகள் மற்றும் இரண்டு புனர்வாழ்வு மையங்கள் இருந்தன.

அவற்றில் எந்த நேரத்திலும், பகல் அல்லது இரவு நேரங்களில் செல்ல முடியும். நான் யாருக்கும் தெரியாமல் இதை செய்வேன், ஏனென்றால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

நான் முழு சிறை அமைப்பையும் மாற்றினேன். நான் அனைத்து போதைப் பொருள் வர்த்தகத்தையும் நிறுத்தினேன். உள்ளே இருந்து நடக்கும் அனைத்து கும்பல் கொலைகளையும் நிறுத்தினேன்.

இப்போது எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. வார இறுதிகளில் நான் மற்ற சிறைச்சாலைகளைப் போலவே அநுராதபுரம் சிறைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டேன்.

நான் ஒருபோதும் உள்ளே நுழைந்ததில்லை, நான் எந்தவொரு கைதியையும் அச்சுறுத்தவில்லை. அது என்னுடைய வேலை அல்ல. அது நான் அல்ல என்று அவர் கூறினார்.

மேலும், நான் வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணைக்கு மாற்ற திட்டமிட்டிருந்தேன்.அது ஒரு அதிநவீன சிறையாக இருக்கும்.நான் இந்த முழு அமைப்பையும் மாற்றினேன், எல்லாவற்றிற்கும் பிறகு நான் இது போன்ற ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று ரத்வத்தே கேட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் உள்ளே தூக்கு மேடைக்கு யாரையும் அழைத்துச் செல்லவில்லை என்று அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.ஆனால் அவர் தனியாக ஆய்வுக்காக சென்றார். அவர் ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்றார்.ஆனால் குற்றம் சாட்டப்பட்டபடி கைதிகளை தொடவில்லை.அப்படி எதுவும் நடக்கவில்லை.இது முற்றிலும் பொய் என்று அவர் கூறினார்.

எனவே, சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தெரிவிக்கப்படும் விடயங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும்.என் மீது சேறு பூசும் நோக்கில் இவ்வாறான போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நான் சிறைச்சாலைகளுக்குள் செல்லும் போது கையடக்கத் தொலைபேசியை கூட கொண்டு செல்வதில்லை.

எவ்வாறாயினும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்தாமல், உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இடமளித்துத்தான் எனது பதவியை இராஜினாமா செய்தேன்.

சிலர் கூறுவதைப் போன்று சி.சி.டி.வி. காணொளிகள் எவையும் அழிக்கப்படவில்லை. அவ்வாறு செய்யவும் முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.