சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
வீடியோ தொழில்நுட்பத்தினூடாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதன்போது நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு, தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, ஒக்டோபர் முதலாம் திகதி வரையில் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார வழிகள் என்பன எக்காரணங்கொண்டும் பாதிக்காத வகையில், அத்தியாவசியச் சேவைகளை முன்னர் போன்று தொடந்து முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, அனைத்துப் பொருளாதார மத்திய நிலையங்களையும் தொடர்ந்து திறந்துவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
அத்துடன், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களில் ஈடுபடுவோர், சுயதொழில்களை மேற்கொள்வோர், எவ்விதத் தடையுமின்றி தமது வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பொறுப்பென்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாது, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.