இலங்கையில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களையடுத்து, பல்வேறு பிரதேசங்களில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் பெருந்திரளாவர்கள் கூடியுள்ளனர்.
‘வைன் ஸ்டோர்ஸ்’ மற்றும் பியர் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று பிற்பகல் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து மலையகம், யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் சுகாதார ஒழுங்குவிதிகளையும் மீறி, மதுப் பிரியர்கள் விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதி வரையில் தொடரும் நிலையிலேயே மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மதுபான விற்பனை நிலையங்களை ஊரடங்கு நிலைமையில் திறக்க நடவடிக்கையெடுக்கப்பட்டமை தொடர்பில் வைத்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.