July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லொஹான் ரத்வத்த தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

File Photo

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி லொஹான் ரத்வத்த சம்பந்தப்பட்டதாக கூறப்படும் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவங்கள் குறித்து இதுவரையில் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்த லொஹான் ரத்வத்த அங்கு, முறையற்றவகையில் நடந்துகொண்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிலரை அவர் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து லொஹான் ரத்வத்த பதவி விலகியிருந்தார். எனினும் அவர், இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக தொடர்ந்தும் பதவி வகிக்கின்றார்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவினால் சீஐடியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சிறைச்சாலைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் விசாரணைக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் பொலிஸ்மா அதிபருக்கு நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.