January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் அரசியல் கைதி நடேசு குகநாதன் விடுதலை செய்யப்பட்டார்

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலையாகி,மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசு குகநாதன் கொழும்பு நீதவான் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவரின் விடுதலை தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கையில்;

முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த இவர்,இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியான 2009.05.18 அன்று ஓமந்தையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.அங்கிருந்து அவர் வவுனியா பூந்தோட்டம் முகாம் மற்றும் மகாரம்பைக்குளம் முகாமில் விசாரணை செய்யப்பட்ட பின்னர்,ஒரு மாதம் வவுனியா யோசேப் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.அங்கிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் 2009.08.24 ஆம் திகதி பாரப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார்.பின்னர் 2009. 09 ஆம் மாதம் பூசாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 21 மாதங்கள் இருந்தார்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு 05 ஆம் மாதத்தில் இருந்து நீதிமன்ற கட்டளைப்படி 10 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.அங்கு அடிப்படை மனித உரிமைகள் வழக்கு பதிவு செய்து கடந்த 2012.03.24 அன்று புனர்வாழ்வு என தீர்ப்பளிக்கப்பட்டு வவுனியா மருதமடு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒருவருட புனர்வாழ்வு நிறைவு செய்து 2013.03.24 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் 2013.07.11 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மீண்டும் கைது செய்ப்பட்டு 4 ஆம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பூசா முகாமுக்கு மாற்றப்பட்டு 18 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார்.பின்னர். 2015.01.02 நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.அங்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் அங்கிருந்து மகசின் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.2013 ஆம் ஆண்டில் இருந்து வழக்குகள் எவையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,குறித்த நபர் வியாழக்கிழமை (16) கொழும்பு நீதவான் நீதிமன்றினூடாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவி இவரின் விடுதலைக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு 100 க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.