கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை காட்டினாலும் கொவிட் மரண வீதத்தில் நாம் இன்னமும் சிவப்பு எச்சரிக்கை வலயத்தில் உள்ளோம்.நாடு இன்னமும் டெல்டா வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என சர்வோதய இயக்கத்தின் தலைவரும் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்திய பீடத்தின் பேராசிரியருமான வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்
உலகில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இப்போதும் 50 வீதத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளது.அதேபோல் நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி வெளிப்பட்டுள்ளது.
கொவிட் மரணங்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி காட்டுகின்றது. இதனால் வைத்திய கட்டமைப்பு சற்று இலகுவாக்கப்பட்டுள்ளது. நோயாளர்களின் நெருக்கடி நிலையில் இருந்து நாம் விடுபட்டுள்ளோம்.ஆகவே இது சற்று பெருமூச்சு விடக்கூடிய நிலைமையேயாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையை பொறுத்த வரையில் நாளாந்த கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கு குறைந்தால்,கொவிட் மரணங்கள் பதிவாகாது இருந்தால் மட்டுமே எம்மால் பச்சை வலயத்தை அடைந்துவிட்டோம் என கூற முடியும்.ஆகவே இலங்கையில் அச்சுறுத்தல் நிலைமை இன்னமும் குறையவில்லை. ஆரோக்கியமான நிலையில் உள்ளோம் என்றும் கூற முடியாது. நாட்டை சாதாரண நடைமுறைக்கு கொண்டு செல்ல இன்னமும் இலங்கையின் வைரஸ் நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.