July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திறந்த பாராளுமன்றமென்ற கொள்கையை இலங்கை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது-சபாநாயகர்

பொது மக்களின் பங்களிப்பு மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளில் பொது மக்களின் ஈடுபாடுகளை அதிகரிக்கும் நோக்கில் திறந்த பாராளுமன்றம் என்ற கொள்கையை இலங்கை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலுக்கு வழிவகுக்கக் கூடிய வகையில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பலப்படுத்தும் முறையை நோக்கிய நடவடிக்கையை நோக்கி நாடு நகர்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் லோக் சபாவினால் வீடியோ தொழில்நுட்பம் மூலம் நேற்று முன்தினம் (15) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையிலும், ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச ஜனநாயக தினத்தை ஒட்டியதாகவும் “பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள ஜனநாயகத்திற்கு சட்டவாக்கத்தின் பங்கு“ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய லோக் சபாவின் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமை தாங்கிய இந்த மெய்நிகர் மாநாட்டில் அனைத்துப் பாராளுமன்றங்களின் சங்கத்தின் தலைவர் திரு.டியுரெட் பச்செக்கோ மற்றும் ஒஸ்ரியா, கயானா, மாலைதீவு, சிம்பாபே, மொங்கோலியா மற்றும் நபீபியா ஆகிய நாடுகளின் சபாநாயகர்களும் உரையாற்றியிருந்தனர். இந்திய பிராந்தியங்களின் சட்டமன்ற சபாநாயகர்கள் பலரும் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இம்மாநாட்டில் இணைந்திருந்தனர். இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது நவீன யுகத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்பதை சபாநாயகர் தனது உரையின்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தின்போது இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தியது. பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகளில் பொது மக்களின் ஈடுபாடுகளை அதிகரிக்கும் நோக்கில் திறந்த பாராளுமன்றம் என்ற கொள்கையை இலங்கை பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதையும் சபாநாயகர் தனது உரையின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.