இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரங்கை ஒக்டோபர் வரையில் நீடிக்க வேண்டும் என்று விசேட மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவ்வாறு தளர்த்தினால் நாடு மீண்டும் கொவிட் தொற்றில் ஆபத்து நிலைக்கு தள்ளப்படும் என்று விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் ஊரடங்கை தளர்த்தாது மேலும் தொடர்வதே பொருத்தமானது என்று அந்த சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தொடர்ந்தும் கொவிட் பரவலில் சிவப்பு வலயத்திலேயே இருப்பதாகவும், அது பச்சையாக மாறிய பின்னரே ஆரோக்கியமான நிலைக்கு நாடு வந்துள்ளது என்று எடுத்துக்கொள்ள முடியும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஊரடங்கை 21 ஆம் திகதியுடன் தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கொவிட் செயலணிக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.