July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா?; விசாரணை நடத்துமாறு கொழும்பு மறைமாவட்டம் கோரிக்கை

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என ஞானசார தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்த கருத்துகளுக்கு கொழும்பு மறைமாவட்டம் அறிக்கையொன்றின் மூலம் பதிலளித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பு போராயர் மல்கம்  ரஞ்சித் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில்,

இலங்கையில் மிக விரைவில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் எனவும், எந்த நேரத்திலும் தாக்குதலை நடத்துவதற்கான ஆயுதங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல, இது தொடர்பிலான தகவல் மற்றும் சாட்சிகள் என்பன தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை நிரூபிப்பதற்கு தன்னால் முடியும் எனவும், இது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து தான் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, ஞானசார தேரர் வெளியிட்ட இந்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கொழும்பு பேராயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், அவரது கருத்து மிகவும் பாரதூரமானது என்று குறிப்பிட்ட கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம், அவரது அறிக்கைகளை விசாரிக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பு மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் கத்தோலிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பது தொடர்பில் தான் மெல்கம் ரஞ்சித்துக்கு அறிவுறுத்தியிருந்ததாக ஞானசார தேரர் தெரிவித்திருந்த கருத்தை கொழும்பு மறைமாவட்டம் மறுத்துள்ளது.

அத்துடன், இது போன்ற எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என்று ஞானசார தேரரால் கொழும்பு பேராயருக்கு எச்சரிக்கவில்லை என்றும் கொழும்பு மறைமாவட்டம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, ஞானசார தேரரினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் கொழும்பு பேராயர் வாசஸ்தலத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் பேராசிரியர் அருட்தந்தை சிறில் காமினி கருத்து வெளியிடுகையில்,

கலகொடஅத்தே ஞானசார தேரரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் உண்மை என்றால் அவருக்கு நாங்கள் விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தால் இதற்கான விசாரணைகளை மேற்கொள்கின்ற நிறுவனங்களுக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினாரா என்பது தான் எமது கேள்வியாக உள்ளது.

அவ்வாறு தெரியப்படுத்தியிருந்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும்.

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்லவுள்ளார் என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த முறையும் இவ்வாறு தான் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் முக்கிய பதவிகளில் உள்ள ஒரு சிலர் அறிந்திருந்தார்கள். ஆகவே, முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியவுடன்  தாக்குதல் இடம்பெற்றது.

எனவே, ஞானசார தேரர் தற்போது வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் மக்கள் மிகவும் அச்சத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். இது தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை நடத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.