ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உள்ளிட்ட சில உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிராக வாக்களித்திருந்தனர்.
எனினும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவும், இஷாக் ரஹ்மானும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.
இந்த நிலையிலேயே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர் அரவிந்தகுமார், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பைஷல் காசீம், நசீர் அஹமட், எஸ்.தௌபீக், மொஹமட் ஹாரிஸ் மற்றும் முஸ்லிம் கூட்டணி உறுப்பினர் அலிசப்ரி இப்ராகிம் ஆகியோர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதனையடுத்து, அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்
தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பியை இடைநிறுத்தியுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றில் மனோ கணேசன் இதனைக் கூறியுள்ளார்.
“தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து அரவிந்தகுமார் எம்.பியை இடைநிறுத்தியுள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ள தமுகூ பாராளுமன்ற குழு இது தொடர்பில் ஆராயும்” என, மனோ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அரவிந்தகுமார் தொடர்பான மேலதிக நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றும் மனோ அறிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில், அரவிந்தகுமார் மட்டும் ஆதரவாக வாக்களித்தார்.