July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வெளிநாடுகளில் இருந்து வருவோர் கொண்டுவரும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது”

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் தனிப்பட்ட பாவனைக்காக கொண்டுவரும் பொருட்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் கடந்த வாரம் முதல் கையடக்க தொலைப்பேசி உள்ளிட்ட 623 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவம் வகையில், இறக்குமதிகளுக்கான உத்தரவாத வைப்புத் தொகையை 100 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தனிப்பட்ட பாவனைக் கொண்டுவரும் பொருட்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்துமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் போது, வழமையாக கொண்டு வரும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்புப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைக்காக கொண்டு வரப்படும் இலத்திரனியல் பொருட்களை இனி கொண்டு வர முடியாது என்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் குறித்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, வெளிநாடுகளில் இருந்து வருவோர் இலங்கைக்கு கொண்டுவரும் பொருட்கள் தொடர்பில் முன்னர் இருந்த ஒழுங்குவிதிகளை தவிர வேறு எந்த கட்டுப்பாடுகளும் புதிதாக விதிக்கப்படவில்லை என்றும், இதன்படி வழமைப் போன்று அவர்களுக்கு அந்தப் பொருட்களை கொண்டு வர முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.