July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழர்களின் துயர நிலையறிந்து ஐ.நா. இன்னமும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும்’

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் தனது வாய்மூல அறிக்கையினை கையளித்திருந்தார்.அதனை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வரவேற்றுள்ள அதேவேளையில், பல் வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் ஐ.நா.வை மட்டுமே நம்பியுள்ள நிலையில், ஐ.நா. இலங்கை தமிழர்கள் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்தவுடன், யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஒரு பொறுப்புக்கூறல் நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வதாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அன்றைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்திருந்தார். அதன் பிரகாரம் ஐ.நா. பொதுச் செயலாளரினால் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு அந்த நிபுணர் குழு ஒரு அறிக்கையை தயார் செய்தது.

அந்த அறிக்கையில், இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அது மேலும் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அந்த அறிக்கையானது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டது. இதன் பிரகாரம் 2012 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் மேற்கண்ட குற்றங்கள் தொடர்பாக பல்வேறுபட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த தீர்மானங்கள் இலங்கை அரசைக் கட்டுப்படுத்தாது என்றும் தாங்கள் இதிலிருந்து வெளியேறுவதாகக் கூறி இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானங்களிலிருந்து வெளியேறிக் கொண்டது. ஆனாலும் கூட 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து 46/1 தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபொழுது, இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானங்களிலிருந்து வெளியேறியதை மையமாகக் கொண்டும் அவர்கள் எத்தகைய விசாரணைப் பொறிமுறைகளையோ, நீதிப் பொறிமுறைகளையோ உருவாக்குவதற்கு எதிர்வினையாற்றியதை மையமாக  கொண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை அரசாங்கம் பாரதூரமான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்றும் ஆணையாளர் வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையின் தொடர் மனித உரிமை மீறல்களை ஆணையாளர் சுட்டிக்காட்டியிருப்பதை வரவேற்கும் அதேநேரம், இலங்கை தொடர்பான ஜெனிவா தீர்மானங்கள் எக்காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதோ அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற வேளையில்,அவை தொடர்பான குறிப்புகள் இல்லாமல் இலங்கையில் நடைபெற்று வருகின்ற தற்போதைய பரந்துபட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலேயே இந்த அறிக்கை அதிக கவனம் செலுத்தியிருக்கிறது என்பதை பாதிக்கப்பட்ட தரப்பினர் என்ற வகையில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

 நிலைமை அவ்வாறு இருந்தபொழுதும் கூட, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கத்தினால் நெருக்கடிக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் காணிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன, மரணித்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த முடியாத நிலை தொடர்கின்றது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுகின்றனர், தமிழ் மக்களின் புராதனச் சின்னங்கள் அகற்றப்பட்டு அதனைச் சுற்றியுள்ள பலநூறு ஏக்கர் கணக்கான காணிகளும் அபகரிக்கப்படுகின்றது. ஒரு தேசிய இனத்திற்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற இந்த அரசாங்கமானது மறுபுறத்தில் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்காக  முன்னர் உருவாக்கிய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பரீசிலிப்பதற்கும் (எல்.எல்.ஆர். சி மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள்) மறறுமொரு ஆணைக்குழுவை நியமித்துள்ளது.

அதுமாத்திரமல்லாமல், காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான அலுவலகங்களை திறந்து வருவதாகவும் அவர்களுக்கு நட்ட ஈடு கொடுப்பதற்கு கடந்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வதன் அடிப்படையில் ஐ.நா. சபையுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றது.இது வெறுமனே ஒரு கண்துடைப்பு மாத்திரமல்லாமல், காலத்தை கடத்தி, தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான ஒரு யுக்தியாகும்.

ஆனால், இவ்வாறான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையகமானது பரிவுடன் கவனத்தில் கொண்டுள்ளது மாத்திரமல்லாமல், இலங்கை அரசாங்கம் அந்த விடயங்களை செய்யும் என்ற எதிர்பார்ப்பினையும் வெளியிட்டிருக்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளரின் மார்ச் 2021 ஆம் ஆண்டின் அறிக்கையானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும், தாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை அரசாங்கத்தின் மேல் முழுவதும் நம்பிக்கையிழந்து, கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக உங்களை மட்டுமே நம்பி காத்திருக்கும் மக்களுக்கு மனித உரிமைகள் ஆணையகத்தின் செப்ரெம்பர் 2021 அறிக்கை என்பது, மனச்சஞ்சலத்தையும் அமைதியின்மையையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஒருசில வாரங்களுக்கு முன்புதான் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக எந்த தேடுதலையோ வேறெந்த நடவடிக்கைகளையோ நடாத்த வேண்டாம் என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கும் சூழ்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை கொண்டு, அவர்கள் அனைத்தையும் செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பது தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தவறிழைக்காமல் செயற்பட வேண்டுமென்பதே தமிழ் மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.காலம் கடந்து போவதற்கு முன்பாக இலங்கை அரசாங்கம் தனது நாட்டின் ஒரு பகுதி குடிமக்களுக்கு எதிராக செயற்பட்டது என்பதையும் இதனால் அவர்களில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும் ஐ.நா. சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலமாகவே இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தடுப்பதற்கும் தமிழ் மக்களுக்கு உரித்தான நீதி கிடைப்பதற்கும் வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.

ஐ.நா.வின் மீதும் அதன் உறுப்பு அமைப்புகள் மீதும் தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஐ.நா.வும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகமும் காப்பாற்றும் என்று எதிர்பார்க்கின்றோம்