முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உள்ளிட்ட குழுவினர் மது போதையில் அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சென்று அடாவடியில் ஈடுபட்டமை தொடர்பில் இதுவரை எந்த முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த 12 ஆம் திகதி வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு சிறைச்சாலைகளும் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக எந்தவொரு முறைப்பாடுகளும் இன்று (15) நண்பகல் 12.00 மணியாகும் போதும் பதிவாகியிருக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த சம்பவத்தில் லொஹான் ரத்வத்த தனது பதவியிலிருந்து விலகிய நிலையில், சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் அந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில் முறைப்பாடுகள் இன்றி விசாரணைகளை முன்னெடுப்பது சிரமம் எனவும், முறைப்பாடுகள் ஏதும் கிடைத்தால் அதற்கு அமைய சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என சிங்கள ஊடகம் ஒன்று வினவியதற்கே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த தகவலை தெரிவித்துள்ளார்.