நாரஹேன்பிட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை உப்புவெளி பகுதியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மூவர் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையின் பாதுகாப்பு பிரிவு மற்றும் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மருத்துவமனையின் சிசிடிவி கமரா காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாம் மாடியிலுள்ள கழிப்பறையொன்றிலிருந்து நேற்று பிற்பகல் கைக்குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டிருந்தனர்.
குறித்த கைக்குண்டு நுளம்பு சுருளின் உதவியுடன் வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் நுளம்பு சுருள் அணைந்ததன் காரணமாக குண்டு வெடிக்கவில்லை என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.