November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக வேறு நபர்களை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய பத்தேகம பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுள வசந்த உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 21 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக 21 புதிய உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை தடுக்கும் வகையில்,மேற்படி உள்ளூராட்சி உறுப்பினர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த மனு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது தொடர்பில் முழுமையாக ஆராயாமல் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுவது நியாயமானதல்ல என சுட்டிக்காட்டிய கொழும்பு மாவட்ட நீதிவான் அருண அளுத்கே, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவருக்கு இடைக்கால தடை விதித்தார்.

அத்துடன், எதிர்வரும் 29 ஆம் திகதி மன்றில் ஆஜராகி, இது தொடர்பில் விடயங்களை முன்வைக்குமாறு மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார மற்றும் ஒழுக்காற்று குழுவின் செயலாளர் அமித்த ஜயசேகர உள்ளிட்டோருக்கு அறிவித்தல் பிறப்பித்தும் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைப்பாட்டாளர்கள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி தியத் விஜேகுணவர்தன, ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.