இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை நீக்குமாறு, இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் வலியுறுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அது தொடர்பாக பாரளுமன்றத்தில் இன்று விசேட விடயத்தை முன்வைத்தே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அதன்போது, சஜித் பிரேமதாஸ கூறுகையில்;
எமது நாட்டின் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்பாக பொம்பியோவுடனான பேச்சுவார்த்தைகளின் போது இராணுவத் தளபதியின் பயணத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி, பிரதமரை கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த விடயத்தில் கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டு இருக்கவோ வேறு வழிகளில் தொடர்பு கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை.
நேருக்கு நேராக அவரை சந்திக்கவுள்ளீர்கள், எனவே அமெரிக்க செயலாளர் நாட்டிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு செல்லும் முன்னர் அவரிடம் இருந்து வாக்குறுதியைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.