January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இன்று வெளியாகும் பீசீஆர் முடிவுகள் ஊரடங்கை தீர்மானிக்கும்” – இராணுவத் தளபதி

கொழும்பு, பேலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இது வரையில் வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அந்த மீன் சந்தையுடன் தொடர்புடைய 250 பேருக்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.

அவர்களில் 188 பேர் நேற்றையத் தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 79 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்று கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் களனியில் 53 பேரும், வத்தளையில் 9 பேரும், கடுவலையில் 6 பேரும், கிரிபத்கொடவில் 3 பேரும், வெல்லம்பிட்டியில் 9 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை காலி மற்றும் பேருவளை மீன்பிடித் துறைமுகங்களில் செய்யப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த இரண்டு மீன்பிடித் துறைமுகங்களையும் தற்காலிகமாக மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இந்நிலையில், பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர்களிடம் நடத்தப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் பெருமளவான முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி

இந்த முடிவுகள் வெளியான பின்னர் ஊரடங்கு சட்டம் தொடர்பாக ஏதேனும் முடிவுகளை எடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதியில் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான தேவை இதுவரையில் ஏற்படவில்லை எனவும், ஆனால் இன்று மாலை பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னர் அதுபற்றி ஆராயப்படும் என்றும், இன்று காலை தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் கலந்துகொண்டு கொவிட் தொற்று தொடர்பாக கூறுகையில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கம்பஹா மாவட்டதிற்கும், கொழும்பு மாவட்டத்தில் 6 பொலிஸ் பிரிவுகளுக்கும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.