November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய வங்கியின் ஆளுநராக கப்ரால் கடமைகளை ஆரம்பித்தார்!

(Photo : twitter/Ajith Nivard Cabraal)
அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக இன்றைய தினம் கடமைகளை ஆரம்பித்தார்.
தனது நியமன கடிதத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடமிருந்து பெற்றுக்கொண்ட அஜித் நிவாட் கப்ரால், அதன்பின்னர் மத்திய வங்கியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பேரில் தமக்கு மத்திய வங்கியை மீண்டும் ஒருமுறை வழிநடத்து வாய்ப்புகிடத்துள்ளமை தமது பாக்கியம் என அஜித் நிவாட் கப்ரால் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட பேராசிரியர் டபிள்யூ.டி. லக்‌ஷ்மன் செப்டம்பர் 14 ஆம் திகதியுடன் ஓய்வுபெறதையடுத்து அந்த பதவிக்கு அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டார்.

மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காக கப்ரால், சில தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இவர், 2006 முதல் 2015 ஆம் ஆண்டு வரை 9 வருடங்கள் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்தார்.

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ‘மத்திய வங்கியின் ஆளுநர்’ பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அஜித் நிவாட் கப்ரால் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.