இலங்கையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பால்மா மற்றும் பயிரிடுவதற்கான விதைகள் இறக்குமதியை முற்றிலுமாக இடைநிறுத்துவதற்கு தேவையான திட்டங்களை முன்வைக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்குள், நாட்டிற்கு தேவையான பயிரிடுவதற்கான விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும், பால்மா இறக்குமதியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர், மக்களுக்கு திரவ பாலை குடிப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும் என்ற இலக்கை அடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு உள்ளாகாமல் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவசாய இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
விவசாய அமைச்சு, இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் வைத்தே அமைச்சர் இதனை தெரிவித்தார்.