November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்டமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

சிறைச்சாலைகள் நிர்வாகம் மற்றும்  கைதிகள் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சரினால் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கண்டித்துள்ளார்.

தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சரை பதவி விலக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை வன்மையாக கண்டிக்கிறேன் என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கேவலமான சட்டவிரோத செயல், நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசுக்கு கடப்பாடு உள்ளது. இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.