முன்னாள் அமெரிக்க தூதர் ரொபர்ட் பிளேக் அமெரிக்காவுக்கு அனுப்பிய, விக்கிலீக்ஸ் கேபிள்களை நீதி அமைச்சர் அலி சப்ரி பார்க்க வேண்டும் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
ரொபர்ட் பிளேக்கின் கூற்றுப்படி, துணை ஆயுதக் குழுக்கள் (ஒட்டுக்குழு) தமிழ் பெண்கள் மற்றும் சிறுவர்களை வெளிநாடுகளுக்கு அடிமை மற்றும் விபசாரத்திற்காக கடத்தி வந்தனர் என கூறப்பட்டுள்ளது.
துணை ஆயுதக் குழுக்கள் பல தமிழ் குழந்தைகளை காணாமல் போகச் செய்தார்கள்.பிரதான ஒட்டுக்குழுக்கள் குழந்தைகளை அடிமைத்தனத்திற்கு விற்றதாக அமெரிக்க அறிக்கை கூறுகிறது.
இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள ஒட்டுக்குழு வலைப் பின்னல்கள் மூலம், பொதுவாக சிறுவர்கள் வேலை முகாம்களுக்கும் பெண்கள் விபசார வளையங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டனர்.
நீதி அமைச்சரே,இந்த துணை ஆயுதக்குழுக்கள் எங்கள் குழந்தைகளை எங்கு அனுப்பினார்கள் என்பதை முதலில் அறிந்து, பின்னர் பேசுங்கள்.
எங்களுக்கு பணம் அல்லது இறப்பு சான்றிதழ் தேவையில்லை. எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய விரும்புகிறோம்.அவர்கள் அனைவரும் இலங்கையிலோ அல்லது வேறு சில நாடுகளிலோ உயிருடன் இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.துணை ஆயுதக்குழுக்களை விசாரித்து அந்த நாடுகளை அறிந்திருக்கலாம்.
80,000 விதவைகள், 50,000 ஆதரவற்றோர் மற்றும் 25,000 காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற சம்பவங்கள் எப்படி நடந்தது என்பதை தமிழர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
ஸ்ரீ லங்காவால் எங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.எனவே நாங்கள் எங்கள் குழந்தைகளை கண்டுபிடிக்க உதவுவதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை அழைக்கிறோம்.
நீதி அமைச்சரே, எங்கள் குழந்தைகள் உயிருடன் இருக்கிறார்கள். பொறுப்பற்ற அறிக்கையை வெளியிடாதீர்கள் என அவர்கள் தெரிவித்தனர்.