November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா கட்டமைப்பை நிராகரிக்கும் இலங்கையின் தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை

ஐநா கட்டமைப்பை நிராகரிக்கும் இலங்கைஅரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெளியக தலையீடுகளை நிராகரிப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் 48 ஆவது அமர்வில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.

ஐநா 46/1 தீர்மானத்துக்கு அமைய இலங்கை நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயத்தில் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் திறம்பட செயற்படுவதை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை போன்றவற்றில் இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி அனிடா பிபான் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்படுவதன் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.