November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள சர்வதேச தரத்திலான ஆய்வு கூடம் நிர்மாணம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவென தனியான சர்வதேச தரத்தில் அமைந்த ஆய்வு கூடம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த ஆய்வகத்தின் மூலம் 3 மணி நேரத்தில் பி.சி.ஆர் முடிவுகள் வழங்கப்பட உள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட குழுவினர் இன்று (14) பி.சி.ஆர் பரிசோதனை நடத்தினர்.

இலங்கையில் இத்தகைய ஆய்வகம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்த அவர், ஆய்வகத்தின் பணிகள் இன்னும் சில நாட்களில் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் ஒழுங்கு முறையின் கீழ் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த ஆய்வகத்தில் ஒரு மணி நேரத்திற்குள் 500 பி.சி.ஆர் சோதனைகள் வரை மேற்கொள்ளக் கூடிய அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதோடு, நாள் ஒன்றுக்கு 7,000 பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது எனவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு நாளும் குறைந்தது 3,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வருவதாகவும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளிடமிருந்தும் 40 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சுற்றுலாப் பயணிகள் முடிவுகள் வரும் வரை ஆய்வு மையத்தில் காத்திருப்பதோடு, தொற்று நிரூபிக்கப்பட்டாலோ அல்லது 1 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருந்தாலோ அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக சுற்றுலா விடுதிகளுக்கு செல்ல வேண்டும்.