பொய்யான அறிக்கையை வெளியிட்டு தனது நற்பெயருக்கு சேதம் விளைவித்தமைக்காக 400 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ரிட் மனு (நீதிப் பேராணை) தாக்கல் செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோகில குணவர்தன ஆகியோரிடமிருந்து தலா 200 மில்லியன் ரூபா இழப்பீட்டை பெற்றுத் தருமாறு கோரியே ரவி கருணாநாயக்க குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
07.08.2021 அன்று தெரண தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட வாதாபிட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கோகில குணவர்தன, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தாம் நிதி அமைச்சராக இருந்த போது வரி மோசடியில் ஈடுபட்டதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாக ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவும் தம்மீது இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக ரவி கருணாநாயக்க இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதாரமற்ற பொய்களை ஊடகங்களின் மூலம் பரப்பியுள்ளதாகவும் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் நற்பெயருக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மனநிலையை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தமக்கு இரண்டு வாரங்களுக்குள் இழப்பீட்டு தொகையை பெற்றுத்தருமாறு மனுவில் கோரியுள்ள ரவி கருணாநாயக்க, அவ்வாறு இல்லாத பட்சத்தில் குறித்த இருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கோரியுள்ளார்.