மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாவனெல்லையில் புத்தர் சில உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு உதவியளித்தமை மற்றும் ஷரீஆ சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அசாத் சாலிக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அசாத் சாலியை பிணையில் விடுவிக்கக் கோரி அவரது சட்டத்தரணி மைத்திரி குணரத்னவால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கோரிக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சந்தர்ப்பத்தில் சந்தேக நபரை வழக்கில் இருந்து விடுவிக்க நீதவான் நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என கொழும்பு பிரதான நீதவான் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் குற்றவியல் விசாரணை திணைக்களம் தமது தரப்பு வாதிக்கு எதிராக குற்றம் சுமத்தினாலும் அவருக்கு எதிராக எவ்வித சாட்சியங்களும் இல்லை என்பதால், அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல குறித்த பிணை மனு கோரிக்கையை நிராகரித்துள்ளதுடன், அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தவிட்டுள்ளார்.