ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெளியக தலையீடுகளை நிராகரிப்பதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உள்ளக பொறிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சமர்ப்பித்து, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐநா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உள்ளக பொறிமுறைகளின் ஊடாக தீர்வு காணப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவை அதன் கொள்கைகளுக்கு ஏற்ப இயங்க வேண்டும் என்று இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது.
வெளியக தலையீடுகள் அரசியல் மயப்படுத்தப்படும் நிலையை உருவாக்குவதை தாம் 30/1 தீர்மானத்தில் கண்டுகொண்டதாகவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனார் தொடர்பான அலுவலகம் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து காணாமல் போனவர்கள் தொடர்பான இறுதிப் பட்டியலைத் தயாரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இழப்பீடுகளுக்கான அலுவலகம் 3,775 பேருக்கு இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்ப தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் 8 அம்ச திட்டத்துடன் செயற்பட்டு வருகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, அதன் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு சர்வதேச தரங்களுக்கு ஏற்ப அதனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதுதொடர்பான அறிக்கை இம்மாத இறுதியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு, அதன் செயற்பாடுகளில் துரித முன்னேற்றம் கண்டுள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல் போனார் தொடர்பில் ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்கு உயர் நீதிமன்ற நீதியரசர்களைக் கொண்டு விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழு, இதற்கு முன்னர் இருந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளையும் ஆராயவுள்ளது. இதுதொடர்பான இறுதி அறிக்கை அடுத்த 6 மாதங்களில் வெளியிடப்படும்.”
என்று வெளியுறவு அமைச்சர் பீரிஸ் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றும் போது, குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சிவில் சமூகங்களுடன் நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி பணிகளில் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து, நீதி நிலைநாட்டுவதோடு, பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க இலங்கை உறுதி எடுத்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.