November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இணையவழி கல்வி கற்கும் சிறுவர்கள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

இணையவழி கல்வியைப் பெற்றுக் கொடுக்க சிறுவர்களை வகுப்புகளுக்கு அனுப்பும்போது அங்கு நடக்கும் செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இணையவழி கற்பித்தலில் இணைந்து கொள்கின்ற சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகிய பல சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகின.

இணைய வழி ஊடாக மேலதிக வகுப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற போது, பாணந்துறை திக்கல பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படம் ஒன்றை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சிறுமியின் தாயார் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அளித்த புகாரின் பேரில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், குறித்த சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இணையவழி கல்வி முறையின் ஊடாக வகுப்புகளில் இணைகின்ற சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இணையவழி வகுப்புகளில் இணைகின்ற சிறுவர்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால் அவர்கள் பல்வேறு ஆபத்துகளுக்கு முகங் கொடுப்பார்கள்.

எனவே, இது மிகப் பெரிய குற்றச் செயலாகும். குற்றவியல் சட்டத்தின் 266/A பிரிவின் பிரகாரம் இவ்வாறான மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு குறைந்தபட்சம் 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கமுடியும்.இதனால் குறித்த ஆசிரியருக்கும் நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

ஆகவே, தமது குழந்தைகள் தொடர்பில் பெற்றோர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.