அஜித் நிவாட் கப்ராலை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் சர்வதேச முதலீடுகளைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நம்பகத்தன்மைக்கு பங்கம் ஏற்படும் வகையில் இருண்ட வரலாற்றுப் பதிவுகளை கொண்ட ஒருவரை ஆளுநராக நியமிக்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் செயற்பாடானது, இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியை அரசியல் மயப்படுத்தலில் இருந்து மீட்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் நிதிக்கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான செயற்பாடாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள சஜித் பிரேமதாஸ, மத்திய வங்கி அரசியல் தலையீடுகள் இன்றி இயங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“நாட்டின் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படப் போகின்ற அஜித் நிவாட் கப்ரால், ஒரு புறம் பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினராகவும் அதே அரசாங்கத்தின் நிதி இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் நியமித்தல் தொடர்பான சர்வதேச தரப்படுத்தலுக்கு அமைவாக அவரை இந்தப் பதவிக்கு நியமக்காமல் இருக்க வேண்டும் என்பதற்கு இது முக்கிய காரணமாகும்.
இதற்கு முன்னர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலத்தில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கச் செய்தார்.
ஹெஜின் உடன்படிக்கை மற்றும் எமது நாட்டுக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடுகளை ஏற்படுத்திய கிரோக்க முறிகள் விநியோகம் போன்ற குற்றச்சாட்டுக்களால் பாரிய கறுப்புப் புள்ளியை ஏற்படுத்தியிருக்கின்றார்.
இவ்வாறான ஒருவரை ஆளுநராக நியமிப்பது மத்திய வங்கியின் நம்பிக்கையைப் பாதிக்க காரணமாக அமையும்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.