November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமையல் எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு முயற்சி!

இலங்கையில் சமையல் எரிவாயு விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

உலகச் சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும், தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதற்கு நுகர்வோர் நடவடிக்கைகள் அதிகாரசபை அனுமதி வழங்கியிருந்தது.

இதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய ‘லாஃப்ஸ்’ சிலிண்டர் ஒன்றின் விலை 363 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்படவில்லை. ஆனால் சில இடங்களில் லிட்ரோ எரிவாயு அதிக விலைக்கே விநியோகிக்கப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு எரிவாயு நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.