July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை பற்றிய மனித உரிமைகள் ஆணையாளரின் கரிசனைகளை ஏற்பதாக பிரிட்டன் அறிவிப்பு

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்பதாக தெரிவித்திருக்கும் பிரித்தானியா, இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை (13) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரின் தொடக்க நாள் அமர்வில் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் உள்ளடங்கலாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரில் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் வெளிப்படுத்தப்பட்ட கரிசனைகளை பிரித்தானியா ஏற்றுக் கொள்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களை பிரித்தானியா தொடர்ச்சியாக வழங்கும் என்றும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.