
ஒக்டோபர் மாதத்துடன் இலங்கையில் சுற்றுலாத்துறைக்காக நாடு திறக்கப்பட வேண்டும். இல்லையேல் மிக மோசமான நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் ரஷ்ய மற்றும் உக்ரெயின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்து இலங்கைக்கு வருகின்ற வேளையில் அவர்களை இங்கு நீண்டகால தனிமைப்படுத்தலில் வைத்திருக்க முடியாது.ரஷ்யாவில் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்து அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது என்றால் அவர்களை தொற்று நோயாளர்கள் என கருத முடியாதென சுட்டிக்காட்டும் அவர்,
இலங்கையில் அவர்களுக்கு சகல சுற்றுலா பிரதேசங்களையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.எனினும் அவர்கள் இலங்கைக்குள் வந்தவுடன் பொது போக்குவரத்துகளில் பயணிக்க அனுமதிக்காது, தனி வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கவும் குழுவாக பயணிக்க ஏற்பாடுகளை செய்து கொடுக்கவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையை இலங்கை நம்பியுள்ள நிலையில்,இலங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களை திறக்க வேண்டும்.நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும்,அடுத்த கட்ட நிலைமைகளை கருத்தில் கொண்டும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.