இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களில் தங்கவைக்கப்படுகின்ற சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அதிகளவில் பணம் அறவிடப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கை வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விரைவான பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்கான வசதிகள் இருந்தும், சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு நாட்டுக்கு வருகின்ற இலங்கையர்களை கூட பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கும் வரை ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் நாளாந்தம் சுமார் 2,000 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர்.
இருப்பினும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை சில மணித்தியாலங்கள் மாத்திரம் ஹோட்டல்களில் தங்கியிருக்கின்ற சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து அதிகளவு பணம் அறவிடப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் ஹிரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்ற CIA நிகழ்ச்சியின் மூலம் பல தகவல்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.