July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கிறது”

ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பாக முன்வைத்த வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மனித உரிமை பேரவையோடு இணங்கிச் செயற்படும் என்று ஜனாதிபதி கொடுத்த உத்தரவாதத்தை செயலில் காண வேண்டும் என்று, மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியள்ளதை தாம் அவதானித்துள்ளோம் என சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அண்மையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டத்தையும்,  சட்ட ஆட்சிக்கு முரணான வேறு விடயங்களையும் சுட்டிக் காட்டியதையும் வரவேற்கிறோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி சம்பந்தமான திடமான நிலைப்பாட்டுக்காக நன்றி செலுத்துகிறோம் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சாட்சியங்களை சேகரித்தல் மற்றும் பாதுகாத்தலுக்கான பொறிமுறை ஏற்படுத்துவது சம்பந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் விரைவில் நிறைவுறும் என்று எதிர்பார்க்கிறோம் என சுமந்திரன் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.