January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கம்!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாஹுல் ஹமீத் முஜாஹிர், அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் சாஹுல் ஹமீத் முஜாஹிர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை அங்கத்தவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்து வடக்கு மாகாண ஆளுநரினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய, தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களின் பிரகாரம், சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவதாக ஆளுநரினால் அந்த வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் திட்டத்தின் 185 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய, எவையேனும் தகுதியின்மைகள் உள்ளனவா என்பது பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதி அலுவலகர் கந்தையா அரியநாயகத்தின் கீழ் அமைக்கப்பட்ட தனி நபர் விசாரனைக்குழுவினால் விசாரனை செய்யப்பட்டு வாதித்தரப்பின் சாட்சியங்களைக் கவனத்தில் கொண்டதன் பின்பு தனி நபர் விசாரனைக் குழுவின் அவதானிப்புக்கள் மற்றும் தீர்ப்புக்களுடன் கையளிக்கப்பட்டுள்ள இறுதி அறிக்கையின் பிரகாரம், சாஹுல் ஹமீத் முஜாஹிர் அந்தப் பதவியில் நீக்கப்படுவதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.