January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மதுபோதையில் நண்பர்களுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்ததாக இராஜாங்க அமைச்சர் மீது குற்றச்சாட்டு!

இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுபோதையில் தூக்கு மேடையை பார்க்க விரும்புவதாகத் தெரிவித்து பலாத்காரமாக வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய முயற்சித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது இராஜாங்க அமைச்சரின் நண்பர்கள் அரை காற்சட்டையிலேயே இருந்ததாகவும் மேலும், குறித்த இராஜாங்க அமைச்சர் கைத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அங்குவந்த நபர் அதிகளவு மதுபான அருந்தி இருந்ததாகவும், சிலர் தரையில் விழுந்ததாகவும் சிறைச்சாலை தகவல்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. .

அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களை தடுக்க முயற்சித்த போது குறித்த நபர்கள் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலை சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இந்த சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தினாலும், மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்றும், அதுதொடர்பில் எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிறைச்சாலை முகாமைத்துவம், புனர்வாழ்வு அமைச்சின் செய்தித் தொடர்பாளர்,  குறிப்பிட்ட சம்பவத்துடன் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்புபட்டிருப்பதாக வெளியாகிய செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்றும், அவ்வாறான ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.