July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிப்புக்கு பின்னால் மருந்து மாபியாவின் சூழ்ச்சி”

ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை சட்டவிரோதமாக மருந்துகளை இறக்குமதி செய்யும் மருத்துவ மாஃபியாவின் சூழ்ச்சி என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

கணினி தரவு தளத்தில் இருந்த முக்கியமான தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எபிக் லங்கா டெக்னோலஜி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான தரிந்ர கல்பகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் செப்டம்பர் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று (13) மீண்டும் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டிற்கு ஔடதங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் பெயர்களும் ஔடதங்கள் மற்றும் உபகரணங்களின் பெயர்களுமே இவ்வாறு தரவு தளத்திலிருந்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக ஒளடத நிறுவனங்கள் தாம் விரும்பிய விலைகளில் ஔடதங்களை விற்பனை செய்யும் அபாயம் காணப்படுவதாகவும் கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீராகலவிற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் விளக்கினார்.

குறித்த தரவுக் கட்டமைப்பை பாதுகாப்பதற்கான முழு பொறுப்பும் எபிக் லங்கா டெக்னோலஜி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், குறித்த நிறுவனம் அதனை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இந்த தரவை திருத்துவது அவசியமானால், உரிய நடவடிக்கைகளை முறையாக சமர்ப்பித்தால் அது குறித்து ஆராயலாம் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுக் கட்டமைப்பை புதுப்பிப்பதிலுள்ள சிக்கலை இரு தரப்புமே சீர்செய்ய வேண்டும் எனவும் அதில் நீதிமன்றத்தின் தலையீடு அவசியமில்லையெனவும் கொழும்பு பிரதம நீதவான் புத்திக்க ஶ்ரீராகல தெரிவித்தார்.

அத்தோடு,தரவுக்கட்டமைப்பை புதுப்பிக்க கடந்த 9 ஆம் திகதி நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவை நீக்கி கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை மேலும் விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.