July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என்றே சம்பந்தன் வலியுறுத்தினார்- சுமந்திரன் தெரிவிப்பு

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை.சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முக்கியமான கூட்டத் தொடராகும். 40/1 தீர்மானம் நிறைவுக்கு வருகின்ற போது இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. ஆகவே இது குறித்து நாம் தமிழர் தரப்பாக ஒன்றிணைந்து ஆவணம் ஒன்றினை தயாரித்து அதில் மாற்றங்களை செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

நாம் அனைவரும் ஒரே நிலைப்பாட்டை எடுத்து அதனை அனுப்பியிருந்தோம்.அதன் பின்னர் மார்ச் மாதத்தில் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.அப்பொழுது அடுத்த செப்டெம்பர் மாத அமர்வில் முழுமையான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இடம்பெறும்.

அதற்கிடையில் இரண்டு தடவைகள் அதாவது 48 ஆவது கூட்டத் தொடர் மற்றும் 50 ஆவது கூட்டத் தொடரில் இந்த விடயம் தொடர்பாக வாய்மூல அறிக்கையை உயர்ஸ்தானிகர் சமர்ப்பிப்பார். இதற்கு நாம் ஆவணம் அனுப்ப வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கடந்த 30/1 பிரேரணை கொண்டுவரப்பட்டதில் இருந்து,அதாவது இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை செய்வதாக ஒப்புக் கொண்டதில் இருந்து அது குறித்து ஆராய்ந்து தொடர்ச்சியாக தெரியப்படுத்தி வருகின்றார்.குறிப்பாக சுயாதீன நிறுவனம் ஒன்று இது குறித்து சுயாதீனமாக ஆய்வுகளை செய்தால் அதனை காரணமாக வைத்து அறிக்கையிட தீர்மானித்திருந்தார்.

அவ்வாறான ஆய்வொன்று இலங்கையின் ஆய்வு நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஆகவே அவர்களின் அறிக்கையை சுட்டிக்காட்டி கடிதமொன்றை வரைந்து அனுப்பியுள்ளோம் எனவும் அவர் கூறினார்.