July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஒக்டோபர் 8 ஆம் திகதி வரையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத் ‍தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இன்றைய முதல்நாள் அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் உரையாற்றவுள்ளார். இதன்போது அவரால் இலங்கை தொடர்பான 46/1 தீர்மானம் குறித்து வாய்மூல அறிக்கையொன்று சமர்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான தீர்மானத்தை பெப்ரவரியில் மனித உரிமை பேரவை நிறைவேற்றியது.

இந்த தீர்மானங்களில் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படாத விடயங்கள் எவை என்பது தொடர்பில் தனது உரையின் போது மனித உரிமைகள் ஆணையாளர் பேரவைக்கு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகலாவிய கொவிட் தொற்று நிலைமையால் இம்முறை கூட்டத்தொடரில் பெரும்பாலான விடயங்கள் காணொளி தொழில்நுட்பம் ஊடாகவே நடக்கவுள்ளது.

இதன்படி இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கொழும்பில் இருந்து இந்தக் கூட்டத்தில் காணொளி ஊடாக கலந்துகொள்ளவுள்ளார்.

இந்தக் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கம் அனைத்து நாடுகளிற்கும் 14 அம்சங்களை கொண்ட அறிக்கையொன்றை வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களையும் கடந்த வாரங்களில் சந்தித்து வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஜெனீவா தீர்மானம் குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன மனித உரிமைகள் பேரவைக்கு கடந்த வாரத்தில் கடிதங்களை அனுப்பியிருந்தது.
அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பங்காளிக்கட்சிகள் அடங்கலாக ஐந்து கட்சிகள் இணைந்து மற்றுமொரு கடிதத்தையும் அனுப்பியிருந்தன.

இதேவேளை, இலங்கையின் மோசமான மனித உரிமை நிலைமையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆழமாக ஆராய்வதுடன், உண்மையான முன்னேற்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

சுயாதீன அரசாங்க நிறுவனங்கள், மக்களாட்சி மற்றும் சட்டவாட்சியில் நிலவும் பலவீனம், அரசாங்கத்தின் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஐ.நா உறுப்பு நாடுகள் எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்படவுள்ள அறிக்கை கடுமையானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

அத்துடன் இம்முறை மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு நெருக்குதல்கள் அதிகரிக்கலாம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.