மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை மறுதினம் (14) மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் ஓய்வு பெறவுள்ளார்.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்கு முன்னர் நேற்றைய தினம் (11) மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தம்மாரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
இது இவ்வாறிருக்க, அஜித் நிவாட் கப்ராலின் வெற்றிடத்திற்கான புதிய பாராளுமன்ற உறுப்பினரின் பதவியேற்பு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டேகொட அந்த வெற்றிடத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு பொதுஜன பெரமுனவினால் அடுத்த வாரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.