October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஆவது திருத்த சட்டம் நிறைவேறியதை விட 8 எம்.பி.க்கள் செய்த துரோகம் அதிக வலியைத்தருகிறது; சரவணபவன்

நாட் டை இருண்ட யுகத்துக்குள் தள்ளியுள்ள 20 ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை விடவும், அந்தத் திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தோடு நிறைவேற மக்களின் முதுகில் குத்தி கட்சி தாவிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த துரோகமே அதிகமான வலியைத் தருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்றிரவு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஒக்டோபர் 22 இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக மாறியுள்ளது. தனிப்பட்ட ஒருவரின் கைகளில் ஒட்டுமொத்த அதிகாரங்களையும் கொடுத்து , ஜனநாயக ரீதியில் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கும் 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றில் 91 மேலதிக வாக்குகளால் – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது.

ஜனநாயகத்தின் பேரைப் பயன்படுத்தி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ராஜபக்சக்களின் சதியை திட்டமிட்டபடி நிறைவேற்றியுள்ளனர். இதன் விளைவை ஒட்டுமொத்த இலங்கையர்களும், எதிர்காலம் முழுதும் அனுபவிக்க வேண்டிய துயரமான, இருண்ட யுகம் தோன்றியுள்ளது.

இந்தத் திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற, எதிர்க்கட்சி வரிசையில் இருந்து முதுகில் குத்தி விட்டு கட்சி தாவிய எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே முக்கியமான காரணம். அவர்களில் 6 பேர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்களுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அரவிந்குமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் டயானா ஆகிய 8 பேரே இந்தத் துரோகத்தைப் புரிந்து நாட்டில் சர்வாதிகார ஆட்சி மலர துணைபோயுள்ளனர்.

20 ஆவது திருத்தம் நிறைவேறிவிட்டதே என்ற துயரை விடவும், இந்த எட்டுப் பேரும் செய்த துரோகமே இன்னும் அதிக வலியை மக்களிடம் உண்டாக்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.