ஊரடங்கு காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் தெரிவு செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல் மற்றும் விசேட அனுமதிப் பத்திரம் உள்ள இடங்களில் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
இதன்படி, சுற்றுலா அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன். தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் கொவிட்-19 கட்டுப்பாட்டு வலய முறைமையை பின்பற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் மட்டத்திலுள்ள ஹோட்டல்களில் மது பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடு முழுமையாக திறக்கப்பட்ட பிறகு மதுக்கடைகளின் முன்பு பொது மக்கள் கூடுவதை தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக. அவ்வாறான இடங்களில் மக்கள் ஒன்று திரண்டால் அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 4500 ஆகும்.
இது இவ்வாறிருக்க, ஊரடங்கு காரணமாக மதுக் கடைகளை மூடுவதால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 70 மில்லியனுக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.