January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 2024 ஆம் ஆண்டுக்குள் மிளகாய் இறக்குமதியை முழுமையாக நிறுத்த திட்டம்!

2024 ஆண்டுக்குள் நாட்டிற்கு மிளகாய் இறக்குமதியை முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்துடன் இயற்கை உரத்தை பயன்படுத்தி நாவலப்பிட்டி கலபொட தோட்டத்தில் 100 ஏக்கரில் முன்னெடுக்கப்பட்டுவரும் மிளகாய் பயிர் செய்கையை அமைச்சர் பார்வையிட சென்றிருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனை தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய மிளகாய் தேவை இறக்குமதியின் மூலம் ஈடு செய்யப்படுகின்றது. எனினும் 2024 ஆம் ஆண்டளவில் இறக்குமதியை முழுமையாக நிறுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“நாட்டில் மிளகாய் பயிர் செய்கைக்கு தேவையான விதைகள் மத்திய மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3,000 ஏக்கர் மிளகாயை வெற்றிகரமாக பயிரிட அமைச்சகம் திட்டமிட்டுள்ளது” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை தன்னிறைவு பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது. அதற்கான திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு முன்னெடுத்து வருகின்றது.

மஞ்சள், உளுந்து உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டில் குறிப்பிட்ட பொருட்களுக்கான கேள்வி நிலவுவதோடு, அதன் விலையும் சாதாரண மக்களினால் அணுக முடியாத நிலையில் உள்ளது.