இலங்கையில் ‘லாஃப்ஸ்’ சமையல் எரிவாயுவுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக இதற்கான தட்டுப்பாடு நிலவுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
‘லாஃப்ஸ்’ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட போதும், போதுமான சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான சிலிண்டர்களே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதனால் ‘லாஃப்ஸ்’ எரிவாயுவை பயன்படுத்தும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி மற்றும் உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டமை என்பனவே காரணம் என்று ‘லாஃப்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் கே.எச்.வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.