January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்கவும்; வடக்கு-கிழக்கு ஆயர்கள் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து,பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுமாறு இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரிடம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம்,திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் மன்னார் மறை மாவட்டங்களின் ஆயர்கள் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவுற்றபோதும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள வடக்கு-கிழக்கு பிரதேசத்தில் சர்வதேச நிறுவனங்கள்,மனித உரிமை கண்காணிப்பாளர்கள்,இராஜதந்திர அதிகாரிகளின் பிரசன்னம் மிகவும் அவசியமாக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் சுவிட்சர்லாந்து தூதரகத்தினுடைய அலுவலகத்தின் பிரசன்னம் மிகவும் முக்கியமானது என்பதை ஆயர் மன்றம் குறித்த கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

அதேவேளை, கடந்த காலங்களில் சுவிட்சர்லாந்து அலுவலத்தின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளினால் வடக்கு-கிழக்கு மக்கள் அடைந்த நன்மைகளுக்காக நன்றி தெரிவிக்கின்றோம்.

அத்துடன் இலங்கையை தமது பூர்வீகமாகக் கொண்டு தற்போது சுவிஸ் பிரஜைகளாக இருக்கின்றவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் பலர் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற நிலையில் அவர்களது சமூக, கலாசார,பொருளாதார தேவைகளை கண்காணிக்க யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் சுவிஸ் தூதரக அலுவலகம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம்,இவற்றை கருத்தில் கொண்டு அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் விரைவில் மீளத் திறக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது