நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பது அநீதியான செயற்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
உலகின் எந்த ஒரு நாட்டிலும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுபவர் அமைச்சராகவோ அரசியலில் ஈடுபடுபவராகவோ இருக்க முடியாது என சட்டத்தில் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மத்திய வங்கி மற்றும் அதன் ஆளுநர் சுயாதீனமாக இயங்க வேண்டும் எனவும் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.
ஒருவர் அமைச்சு பதவியை துறந்தாலும் உடனடியாக மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட முடியாது என சுட்டிக்காட்டிய அவர், பதவியை ராஜினாமா செய்தாலும், குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்பதற்கு முன்னர் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.