நாட்டை விரைவாக திறக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் மக்களுக்கு கொரோனா தொடர்பில் போலியான தகவல்களை வழங்குவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும், அதனைக்கொண்டு இறப்புகளின் எண்ணிக்கையை குறைவாகக் காட்ட முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் ஒரு நாளைக்கு 20,000 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இப்போது அவை 50 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக ஹர்ஷன ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு பொய்யான தகவல்களை வழங்க முடியாத காரணத்தினால் விஷேட மருத்துவ நிபுணர்கள் கொவிட் செயலணியில் விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நிபுணர் குழுவின் பரிந்துரைகளைப் புறக்கணித்து, தன்னிச்சையாக செயற்படுவதாகவும் ஹர்ஷன ராஜகருணா எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
அதிகமான கொரோனா நோயாளிகள் வீடுகளில் இருப்பதாகவும் அவர்களுக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.