July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிரேரணையை அவசரப்பட்டு பாதுகாப்பு சபைக்கு கொண்டுபோய் தோற்கடிப்பது எமது நோக்கமல்ல’

தமிழருக்கான நியாயம்,நீதி கேட்டு சர்வதேசத்திடம் செல்பவர்கள் ஒருபோதும் பக்கச்சார்பாக செயற்படமுடியாது.நாம் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோம். ஆனால்,பக்கச்சார்பாக செயற்பட முடியாது.இதுவே எமக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இருக்கும் வேறுபாடு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தொடர்பான பிரேரணையை அவசரப்பட்டு பாதுகாப்பு சபைக்கு கொண்டு போய் பிரேரணையை தோற்கடிப்பது எமது நோக்கமல்ல.சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இதனை எம்மால் வெற்றி கொள்ள முடியும். எம்மால் பிரேரணையை பாதுகாப்பு சபைக்கு நகர்த்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணை தொடர்பிலான வாய் மூலமான முன்னேற்ற அறிக்கையை ஐ.நா.உயர்ஸ்தானிகர் வழங்கவுள்ளார்.அது மட்டுமே இந்த கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளது.அதற்கு அப்பால் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படாது.

அடுத்த மார்ச் மாதத்தில் கூடும் 49 ஆவது கூட்டத் தொடரிலும் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படாது.அதிலும் வாய்மூல அறிக்கையே முன்வைக்கப்படும்.ஜூனில் இடம்பெறும் 50 ஆவது கூட்டத் தொடரிலும் எதுவும் நடைபெறப் போவதில்லை.46/1 பிரேரணை தொடர்பிலான எழுத்து மூல அறிக்கையானது 2022 செப்டெம்பரில் இடம்பெறும் 51 ஆவது கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படும்.இதன்போதே இலங்கை தொடர்பிலான விவாதம் இடம்பெற்று தீர்மானம் நிறைவேற்றப்படும்.

ஆகவே இந்த கூட்டத் தொடரில் என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்த தெளிவை வழங்க வேண்டியுள்ளது.இந்த கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப் போவதாக ஒரு எண்ணப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கப் போவதில்லை.இலங்கை தொடர்பில் ஏதேனும் ஒரு நடவடிக்கை,வாய்மூல அறிக்கை தயாரிக்கப்படும் வேளையில் தொடர்ச்சியாக நாமும் இலங்கையின் நிலைவரம்,இடம்பெறும் சம்பவங்கள் குறித்து முன்வைப்பது வழமையே.

2012 ஆம் ஆண்டில் இருந்து எமக்கும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் இடையில் தொடர்புகள் இருந்து வருகின்றது.அதுமட்டுமல்ல, இந்த விடயங்களில் அவர்கள் அரசியல் கட்சிகளுடன் பேசுவதை விடவும் கூடுதலாக சிவில் சமூகங்களுடனேயே பேசுவார்கள்.காரணம் என்னவென்றால், நாடுகளின் மனித உரிமைகளை ஆராய்கின்ற அமைப்பு என்ற ரீதியில் அரசியல் சாராது நடு நிலையான தரப்பையே நாடுவார்கள்.

ஆனால் எமக்கும் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் இடையில் நீண்டகால தொடர்பு உள்ளது.நாம் நியாயமாக பேசுகின்றோம் என்பதை அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆவணங்கள், தகவல்களை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.