தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் உள்ளன.அரசியல் கூட்டணியின் தன்மைகள் அதுதான்.இவ்வளவு காலமும் நாம் பிச்சினைகள் இல்லாது பயணிக்கவில்லை.பல பிரச்சினைகள் இருந்தும் நாம் ஒன்றாக பயணித்துள்ளோம்.ஆகவே இனியும் பயணிக்க முடியும்,தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் என்பதற்காக நாம் வேறு வழியில் பயணிக்கின்றோம்.பங்காளிக் கட்சிகள் வேறு வழியில் பயணிக்க வேண்டும் என்று கூறவும் முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்.அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
சம்பந்தன் அனுப்பிய அறிக்கையும் ஒரு வரைபே.அதில் தமது கருத்துக்களை முன்வைத்திருக்க வேண்டும்.அதனை விடுத்தது எமக்கு தெரியாமல் ஒரு அறிக்கையை தயாரித்து அதில் கைச்சாத்திட்டு அனுப்பியது தவறு.அதனை சுட்டிக்காட்டியதால் கூட்டமைப்பு பிளவுபட்டுவிட்டதென ஊடகங்கள் செய்திகளை பிரசுரித்துக் கொண்டுள்ளன.
கூட்டமைப்புக்குள் எந்தவித பிளவும் ஏற்படவில்லை. வரைபை வரையும் பொறுப்பை என்னிடத்தில் கொடுத்துவிட்டு எங்களுக்கு தெரியாது களவாக ஒரு வரைபை தயாரித்துவிட்டார்கள் என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயமானது.
அவ்வாறு தயாரிப்பதென்றால் என்னிடத்தில் அல்லது தலைவர் சம்பந்தனிடத்தில் கூறியிருக்க வேண்டும்.இவர்களின் நொண்டிச் சாட்டிற்கு இடமளிக்க முடியாது.
தவறுகளை நாம் உரக்க கூறுவோம். ஆனால் தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் என்பதற்காக நாம் வேறு வழியில் பயணிக்கின்றோம்,பங்காளிக் கட்சிகள் வேறு வழியென கூறவும் முடியாது.நாம் யாரும் அவ்வாறு கூறவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.